நெல்லிக்காய்களை திரட்டி மூட்டையாக்குவோம்.
12/08/2020 சேலத்திலிருந்து ஒரு அன்பு அலைபேசி அழைப்பு. நமது ஆகஸ்ட் இதழின் முன்னெடுப்பும் பின்னெடுப்புமாக அமைந்திருந்தது. நமது கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர் எதிர்முனையிலிருந்து பேசினார். முத்தரையர் இனம் ஒன்றிணைந்து அரசியல் ஆற்றலினைப் பெருக்கிட வேண்டும் என்ற நமது விருப்பம் / வேண்டுகோளுக்கு ஒரு விடை அல்லது ஆலேசனையாகக் கூறப்பட்ட அவரது ஆலாசனையை உறவுப்பாலம் நம்முடைய உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறது. இன்றைய சூழலில் பல்வேறு அரசியல் கட்சிகள் பண பலத்துடனும் அதிகார பலத்துடனும் அரசியல் களத்தில் செயலாற்றி வரும் பொழுது இன்னொரு அரசியல் கட்சியாக உருவெடுத்து வலுப்பெற்று அரசியல் அதிகாரம் பெறுவது அவ்வளவு எளிதல்ல அதற்கு பதில் வலுவான பலமிக்க கட்சி ஒன்றுடன் நாம் இணைந்து செயல்பட்டு நமது மக்கள் தொகையின் அடிப்படையில் ஒரு கனிசமான இடங்களைக் கோரிப் பெற்று வெற்றி காண்பதன் மூலம் நம்மை அரசியலில் நிலைநாட்டிக் கொள்ள முடியும். இந்தியாவின் பெருமையை உலகில் வலுப்பெறச் செய்தது, நிதித்துறையில் வலுவான அந்நியச் செலாவணி இருப்பினை கட்டமைத்தது என்ற அளவில் திரு மோடி அவர்களின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே நாம் வாய்ப்புள்ள ஒரு கட்சியுடன் இணைந்து களப்பணியாற்றி அரசியலில் செல்வாக்கு பெற முயற்சிக்கலாம் என்பதாகக் கூறினார்.
திருச்சியில் அரசியல் களம் என்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட்டு நம் மக்களை ஒன்றிணைக்க (வாக்குகளை ஒருமைப்படுத்த முயற்சித்து வருகிறது; ஒத்தகருத்துள்ளோர் இணைந்து விவாதித்து ஒரு நல்ல முடிவினை எட்டினால் சிறப்பாக இருக்கும் என்று கூறி தனது உரையாடலை நிறைவு செய்தார் சேலத்து அழைப்பாளர். உறவுகள் உரையாடலின் அடிநாதத்தை கவனத்தில் கொண்டு நமது முத்தரையர் இனம்... மக்கள் மறுமலர்ச்சி மன்றம் அல்ல) செயல்பாடுகள் எவ்வாறிருக்க வேண்டும் என்பதையும் அதற்கான செயல்திட்டங்களையும் கூறினால் நாம் ஏதேனும் நல்ல முயற்சியில் ஈடுபட வாய்ப்பாகும்.
புத்தக உலகிற்கு புதியதோர் வரவு: கருவூலம், நமது இன மக்கள் பெருமைகொள்ளத்தக்க விதத்தில் கவிதை உலகில் வலம் வரும் கவிஞர் கொட்டப்பட்டு ப.சக்திவேலனார் அவர்கள் மீண்டுமொரு புதிய நூலினைப் படைத்துள்ளார். கருவூலம் எனும் அந்நூல் 31 அரிய வெண்பாக்களை கொண்டுள்ளது. பாக்கள் அத்துணையும் சமூகப்பார்வை கொண்டவையாயுள்ளன. தற்கால மக்கள் தங்கள் உரிமைகளையும் கடமைகளையும் உணரும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளன. இளங்கதிர் வெளியீட்டகம் வெளியீட்டில் வெளி வந்துள்ள இந்நூல் விலை ரூ.50 ஆகும். ஆசிரியரின் தொடர்பு எண்: 9443638947
பந்தயம் ஒரு வணிகரும் வங்கியரும் அருகருகே வசித்து வந்தனர். வங்கியர் பெரும் செல்வந்தர் எனவே தனது கருத்துக்கு எதிர் கருத்து வருவதை விரும்பமாட்டார். வணிகர் எளிமையானவர். அவர்கள் மாலை நேரங்களில் பொழுது போக்காக ஏதேனும் உரையாடுவதுண்டு. அவ்வாறு ஒருநாள் உரையாடுகையில் வங்கியர் கொடுஞ்செயல்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளுள் தூக்கு தண்டனையே விரும்பக்கூடியது. ஏனென்றால் தண்டனைபெற்றவன் உடனேயே தண்டனை நிறைவேற்றப்பட்டு இறந்து விடுகிறான். ஆனால் (ஆயுள்) சிறை தண்டனை கொடுமையானது. ஏனெனில் நெடுங்காலம் தனிமைச் சிறையில் வாட வேண்யுள்ளது என்றார். ஆனால் வணிகர் ஆயுள் தண்டனையே நல்லது ஏனெனில் அவன் சிறையில் தனிமையில் வருந்திய போதும் வாழ்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அனுபவங்களைப்பெறுவதற்கும் உதவுகிறது என்றார். இவர்களது உரையாடலின் ஊடே அவ்வூர் இளைஞர் 25 வயதே நிறைந்த வழக்குரைஞர் ஒருவர் கலந்து கொண்டு வாழும் வாய்ப்பிருப்பதால் ஆயுள் தண்டனைதான் சிறந்தது என வாதிட்டார். சற்று கோபமடைந்த வங்கியர் அவ்விளைஞரைப் பார்த்து அவ்வாறெனின் நீங்கள் சிறையிலிருப்பீரா? என்று கேட்டார். வழக்குரைஞரோ தான் உறுதியாக 5 ஆண்டுகள் என்றாலும் சிறையிலிருக்கத் தயார் என்றார். உடன் வங்கியர் அவ்வாறெனில் நான் 20 லட்சம் தருகிறேன் 5 ஆண்டுகள் சிறையிலிருங்கள் என்றார். இளைஞரோ இது உறுதியென்றால் தான் 15 ஆண்டுகள் கூட சிறையிலிருக்கத் தயார் என்றார். விவாதம் கடுமையாகவே வங்கியர் கூறினார். அப்படியென்றால் நான் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு 15 ஆண்டுகள் சிறையிலிருங்கள் நான் 20 லட்சம் தருகிறேன். நிபந்தனைகள் மீறினால் அப்பந்தயத்தில் தோற்றதாகக் கருதி தொகை அளிக்கப்படமாட்டாதென்றார். வணிகர் முன்னிலையில் ஒப்பந்தம் தயாரானது.
தனிமைச்சிறையில் 15 ஆண்டுகள் இருக்க வேண்டும். சனவரி முதல் நாள் பகல் 12 மணிக்கு சிறையனுள் சென்றால் 15 ஆண்டுகள் கழித்து அதே சனவரி முதல் நாளில் பகல் 12 மணிக்கு பந்தயம் நிறைவு பெறும். சிறையில் கதவைத் தவிர ஒரே ஒரு சன்னல் மட்டும் இருக்கும் அதன் வழியாக தனது விருப்பங்களை சீட்டுக்களில் எழுதி தெரிவிக்கலாம் அவை நிறைவேற்றப்படும் ஆனால் எந்த ஒரு மனிதரையும் எக்காரணம் கொண்டும் பந்தயம் நிறைவேறும் வரை பார்க்கக்கூடாது. சிறைக்கதவு மூடப்பட்டு முத்திரையிடப்படும் 15 ஆண்டுகள் கழித்து குறித்த தேதியில் குறிப்பிட்ட காலத்தில் தான் திறக்கப்படும்.அவருக்குத் தேவையான உணவுகள், மது சிகரெட், புகையிலை போன்றவையும் வழங்கப்படும். இசைக்கருவிகள் விரும்பினால் வழங்கப்படும். கோரும் புத்தகங்களும் வழங்கப்படும். சிறையில் படிக்கலாம் கற்கலாம் ஆனால் வெளித்தொடர்பு கூடாது. காலக்கெடு முடிவதற்கு முன் அது 10 நிமிடமானாலும் இந்நிபந்தனைகளை மீறினால் பந்தயம் தோற்றதாக ஆகிவிடும். இந்நிபந்தனைக்குட்பட்டு அந்த இளைஞன் சிறை புகுந்தார். 20 லட்சமல்லவா.?
கேட்ட உணவு வகைகள் அளிக்கப்பட்டன. அவன் மதுவோ புகையிலையோ விரும்பவில்லை அவை மனிதனுக்கு கேடு விளைவிப்பவை எனக் கருதினான். பியானோ இசைக்கருவியை இசைத்தான். நூல்களைப் படித்தான் எண்ணற்ற நூல்களைப் படித்தான். அறிவியல், சமூகவியல், பொருளியல், வரலாறு என பல துறைகள் சம்பந்தப்பட்ட நூல்களையும் படித்தான். 4 ஆண்டுகள் 600க்கு மேற்பட்ட நூல்களைப் படித்த அவன் புதிய ஏற்பாட்டினை மட்டுமே ஓராண்டு படித்தான். நூல்கள் வழியே பல மொழிகளையும் கற்றான் கற்ற மொழிகளில் சில படைப்புகளைப் படைத்து மொழி வல்லுநர்களிடம் அவற்றை சரிபார்த்து பிழையிருந்தால் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். பேசக்கூடாதென்பதால் பிழையில்லையெனில் அந்த வங்கியர் துப்பாக்கியால் ஒரு தடவை சுட வேண்டுமென்றும் அவ்வாறு சுடவில்லையெனில் பிழை உள்ளதென்று கொள்வதாயும் எழுதியிருந்தான். அவனது படைப்புகளை படித்து வல்லுநர்கள் வியப்படைந்தது மட்டுமின்றி அவை சிறப்பாகவும் இருப்பதாகக் கூறினார்கள் துப்பாக்கியும் ஒலிக்கப்பட்டது. மட்டற்ற மகிழ்ச்சியடைந்தான் அச்சிறைவாசி. ஆண்டுகள் கடந்தன. வங்கியரின் நிதி நிலைமை நலிவடையத் தொடங்கியது. அவர் கவலை கொள்ளத்தொடங்கினார் பந்தய முடிவில் சிறைவாசி வெளியே வரும்போது 20 லட்சம் தர வேண்டுமே என்றும் தமது நிலை அதை அனுமதிக்குமா என்றும் கவலைப்பட்டார். 15 ஆண்டுகள் முடிவில் டிசம்பர் 31 ஆம் நாள் நள்ளிரவில் அவன் எவ்வாறிருக்கிறான் என்பதை சன்னல் வழியாக பார்க்க முயற்சித்தார். அறையினுள் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை . மிகுந்த சிரமத்திற்குப்பின் அவன் சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தது தெரிந்தது. எவ்வித அசைவுமில்லை. அவனை கொன்றுவிட்டால் கூட நல்லது என்று நினைத்தார்.
எவ்வித சந்தடியுமின்றி முத்திரையிட்ட கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார். அவ்விளைஞன் தலையில் நீண்டமுடிகளுடனும் மழிக்கப்படாத முகத்துடனும் எலும்பும் தோலுமாக கலையிழந்து சோர்ந்து காணப்பட்டான். இவனைக் கொன்றால் கூட யாரும் அவன் உடல் நலிந்து இறந்தானென்றே நம்புவர் அவ்வாறிருந்தது அவன் தோற்றம். அறையின் மூலையில் பியானோவின் மீது ஒரு தாள் தென்பட்டது. சரி அதனை படித்துப் பார்க்கலாம் என்று அதனை எடுத்து படிக்க ஆரம்பித்தார் அந்த வங்கியர். .... தொடரும்